×

முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!

நன்றி குங்குமம் தோழி

“நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்…”
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சுபைதா அப்துல் கரீம் ஓர் உதாரணம்.

‘‘என் பெயர் சுபைதா. எங்களுக்கு பூர்வீகம் குஜராத் மாநிலம். நான்கு தலைமுறைகளுக்கு முன்பே காந்தி பிறந்த போர்பந்தலில் இருந்து மதுரை வந்து செட்டிலானவர்கள். எனது பெற்றோரில் தொடங்கி நாங்கள் பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க மதுரை. மீனாட்சி அம்மன் கோயில் அருகே எங்களுக்கு சொந்தமாய் ஜவுளிக்கடை இருந்தது. ஆறு வயதிலேயே நான் பள்ளிக்கூடம் முடிந்ததும், கடையில் துணிகள் இருக்கின்ற உயரமான ரேக்குகளின் மீது ஏறி, சரக்குகளை எடுத்துக் கொடுப்பது, வாடிக்கையாளர் கேட்பதை எடுத்துக்காட்டுவது என தொழில் பழக ஆரம்பித்தவள். அப்பாவைப் பார்த்தே பெரும்பாலும் வளர்ந்ததால் தொழிலதிபராகும் கனவு எனக்குள் இருந்தது. வளர்ந்து பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்ததும், சட்டம் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் வாழ்க்கை என்னை வேறு பக்கமாக நகர்த்தியது.

எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் செய்துவிடுவார்கள் என்பதால், சொந்த அத்தை மகனுக்கே என்னைத் திருமணம் செய்தனர். அவர் என் உறவினர் என்றாலும், தெரியாதவரைத் திருமணம் செய்தது போன்றே இருந்தது. காரணம், அவர் வேறொரு ஊரில் படித்து வளர்ந்ததால், திருமணம் வரை நாங்கள் அதிகம் பார்த்துக்கொண்டதில்லை.

என் கணவரின் பின்னணியும் ஜவுளி தொழில் சார்ந்ததுதான் என்றாலும், அவர் ஐ.டி. பணியில் இருந்ததால் சென்னைக்கு நாங்கள் மாறினோம். குறைவாகச் சாப்பிட்டாலும் வீட்டுச் சமையலில் உணவகத்தின் ருசியை எதிர்பார்ப்பவர் என் கணவர். அவருக்காகவே ருசியான உணவுகளை தேடித்தேடி சமைத்ததில், ஹோட்டலில் தயாராகும் ஷவர்மாவைக்கூட அதே ருசியில் வீட்டில் தயாரிக்கத் தொடங்கினேன். அருகாமையில் வசிப்பவர்கள் ‘எப்படி இதெல்லாம் வீட்டிலேயே இத்தனை நேர்த்தியாக செய்யுறீங்க’ என ஆவலாய் கேட்க ஆரம்பித்து, ‘உங்கள் தயாரிப்பை பலருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பதைவிட, வீடியோவாக்கிவிடுங்கள்’ எனச் சொல்ல ஆரம்பித்தனர்.

‘வேலைக்கு போற பொண்ணே எனக்கு வேண்டாம், ஹவுஸ் வொய்ஃப்தான் வேண்டும்’ எனச் சொல்லி என்னைத் திருமணம் செய்து கொண்டவர் என் கணவர். திருமணம் முடிந்து 6 வருடங்கள் வரை அப்படியேதான் வாழ்ந்தேன். போகப்போக எனது திறமைகளை உணர்ந்தவர், ஹவுஸ் வொய்ஃப்பாக மட்டுமே இருக்க வேண்டிய பொண்ணு இல்ல இவள்… திறமைகள் அனைத்தையும் அடக்கி வச்சுருக்கா என சரியாகப் புரிந்துகொண்டார்.

அப்போது சமூக வலைத்தளங்கள் பரவலான நேரம். தொழிலதிபர் ஆகும் கனவில், என்னிடம் இருப்பதை வைத்து என்ன செய்யலாம் என யோசித்ததில், என்னிடம் இருந்த கிச்சனில் வைத்தே, உணவுத் தயாரிப்பு வீடியோக்களை யு டியூப்பில் பதிவேற்றத் தொடங்கினேன். நான் தயாரித்த பாய்வீட்டுக் கல்யாண பிரியாணி, சாம்பார் சாதம் இவற்றுக்கெல்லாம் மில்லியனில் வீயூவ்ஸ் இருந்தது. பிறகு என் பெயருடன் எனது கணவரின் பெயரான அப்துல் கரீமையும் சேர்த்து, Zac’s kitchen யு டியூப் தளம் உருவானது’’ என தன் முதல் வெற்றியை மகிழ்ச்சியோடு பகிர்ந்தவாறே மேலும் பேச ஆரம்பித்தார் சுபைதா.

‘‘உணவுத் தயாரிப்போடு நிற்காமல் ப்ராடெக்ட் ரெவியூவ்ஸ்களையும் எனது சேனலில் கொடுத்ததில், வரவேற்பு அதிகரித்தது. சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாகி, என்னை முழுமையாக நம்பி, நான் குறிப்பிடுகிற பொருட்களை வாங்கத் தொடங்கினர். கமென்ட் செஷனிலும் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்கள் கிடைக்கத் தொடங்கியது. பிரபல சேனல்கள் சிலவும் குக்கரி ஷோக்களை நடத்த வாய்ப்புகளையும் வழங்கினர். எனது குழந்தைகளோடு சென்று நிகழ்ச்சிகளையும் வழங்கிக்கொண்டிருந்தேன். இத்துடன் எனது வளர்ச்சியை நிறுத்தாமல், என் தேடல்கள் அதையும் தாண்டி நகர்ந்தது. அத்தனைக்கும் எனது கணவர் பக்கபலமாக நின்றார்.

2019 கொரோனா லாக்டவுனில் வொர்க் ஃப்ரெம் ஹோமில் என் கணவர் இருந்த நேரம். சோஷியல் ப்ளாட்ஃபார்ம் வழியாக, அயர்ன் அண்ட் காஸ்டிங் பாத்திரங்களை விற்பனை செய்கிற வாய்ப்பு ஒன்று என்னைத் தேடி வந்தது. இந்தத் தொழிலை சரியாகப் பண்ண முடியுமா என்கிற பயமும், பதட்டமும் எனக்குள் இருந்தது.

“புராடெக்ட் ரெவியூவ்ஸ்களை நீ அழகா, சிறப்பா கொடுக்குற மாதிரித்தான் விற்பனையும். எல்லோரையும்போல பொருட்களை வாங்கி விற்காமல், தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து, எப்படி இருந்தால் பயன்பாட்டிற்கு சிறப்பாய் இருக்கும் என்பதை கேட்டு வாங்கி, யுனிக்காக விற்பனை செய். எங்கிருந்தாலும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக உன்னைத் தேடி வருவார்கள்” என நம்பிக்கை ஊட்டினார். இப்படித்தான் எனது ROCH Cookware விற்பனையகம் ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே தொடங்கினேன்.

நல்ல பொருட்களை கொடுத்தால், மக்கள் வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த பிறகு, எனது விற்பனைப் பொருட்களின் யுனிக்னெஸ் குறித்த ரெவியூ வீடியோக்களையும் வலைத்தள பக்கங்களில் ரீல்ஸ்களாகவும், வீடியோவாகவும் பதிவேற்றியதில் வாடிக்கையாளர்கள் மேலும் அதிகரித்தனர்.

ஒவ்வொரு பொருளையும், அதன் பாரம்பரியம், தரம், உறுதி, வடிவமைப்பு, பயன்பாடு என கவனத்தில் வைத்து, இன்றைய தலைமுறையும் பயன்படுத்துகிற விதத்தில் நேர்த்தியாக கொடுப்பதால் ரிபிட்டெட் வாடிக்கையாளர்கள் அதிகமாகினர்’’ என்கிற சுபைதா, ‘‘30 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் எனக்கு வெளிநாடுகளில் இருக்கிறார்கள்’’ என்கிறார் வெற்றிப் புன்னகையை உதிர்த்தவராய்.

‘‘பழமையை நிராகரிப்பது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது’’ என்றவர், ‘‘உலோகங்களால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் குறித்து தெரியாமலே அவற்றை நாம் நிராகரிக்கிறோம். தெரிந்து பயன்படுத்தினால் பல்வேறு நோயில் இருந்து தப்பிக்கலாம். இரும்பு… வெங்கலம்… பித்தளை… மண் பாத்திரங்களின் பராமரிப்பு அதிகம் என நினைத்து அவற்றைத் தவிர்த்தால், நம்மை அது கைவிடும். பராமரித்து பயன்படுத்தினால், நமது ஆரோக்கியத்தை அது பாதுகாக்கும்” என்கிறார் அழுத்தமாக.

‘‘உடல் நலம் சரியில்லை எனில் மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைப்பது Zinc மாத்திரைகள்தான். நமது மூதாதையர் உணவுத் தயாரிக்க பயன்படுத்திய பித்தளைப் பாத்திரங்களில் மருத்துவர் குறிப்பிடும் Zinc இருக்கிறது. தாமிரமும்(copper), துத்தநாகமும் (Zinc) சேர்ந்ததே பித்தளை. தாமிரமும்(copper), தகரமும் (tin) இணைந்ததே வெங்கலம். கனம் அதிகமான வெங்கலம், பித்தளை பாத்திரங்களில் சமைப்பதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளும்(nutirition) அப்படியே கிடைக்கும்.

பொருட்களை விற்பனை செய்வது மட்டுமல்ல எனது நோக்கம், ஒவ்வொரு தயாரிப்புக்குப் பின்னாலும் இருக்கும் மூலப்பொருட்கள் குறித்த ஆராய்ச்சியும், அது குறித்த விழிப்புணர்வையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதும் எனது பணிதான்’’ என்றவர், ‘‘தொழில் சார்ந்து பயணிக்கும் பெண்களுக்கு இடையூறுகள் பல இருக்கும்தான். அவற்றைச் சமாளித்து உயரே வருவதே வெற்றியின் இலக்கு. இது ஒரு சுகமான வலி. இந்த வலியினை பெண்கள் அனுபவித்து அதையும் தாண்டி சாதிக்கணும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

ஆன்லைன் விற்பனையாக இருந்த எனது தொழிலை, வாடிக்கையாளர்கள் நேரில் டச் அண்ட் ஃபீல் செய்து வாங்குகிற மாதிரியான அவுட்லெட் விற்பனையாகவும் விரிவுபடுத்தி வாடிக்கையாளர் விருப்பத்திற்கும் கஸ்டமைஸ்டு செய்தும் கொடுக்கிறோம்’’ என்றவர், ‘‘இன்று என்னிடம் பல்வேறு பணிகளில் 15 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் பெண்களே அதிகம்’’ என்கிறார் விரல் உயர்த்தி.

‘‘தொழிலில் எனக்கு இருக்கிற அர்ப்பணிப்பை பார்த்து எனது கணவர் அவரின் ஐ.டி பணியை விட்டுவிட்டு, இருவரும் இணைந்தே தொழிலில் பயணிக்கிறோம். எங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்வது, ஈகோ பார்ப்பது, ஈக்குவாலிட்டி பேசுவதெல்லாம் சுத்தமாகக் கிடையாது. பட்டத்தை சுதந்திரமாகப் பறக்கவிட்டு அன்பெனும் நூலில் எங்களை கட்டி வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் காதலின் ரகசியம். எங்கள் தொழிலின் வெற்றியின் ரகசியமும் இதுதான்…’’கணவர், குழந்தைகள், குடும்ப வாழ்க்கையோடு, தொழிலிலும் தான் ஜெயித்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்து விடைபெற்றார் சுபைதா அப்துல் கரீம்.

சுபைதாவின் டிப்ஸ்…

* பித்தளை பாத்திரத்தில் ஈயம் பூசாமல் சமைப்பது உடலுக்கு தீங்கானது.
* பித்தளையில் இருக்கும் அல்கலைன் (Alkaline) கேன்சர் வருவதையும், சிறுநீரகப் பிரச்னை வராமலும் தடுக்கும்.
* ஈயப் பாத்திரத்தில் சமைப்பதால் உடலில் உள்ள கிருமிகள் அழியும்.
* நான்ஸ்டிக் மற்றும் அலுமினியம் இரண்டிலும் கேன்சர் நோயினை உண்டாக்கும் அனைத்துக்கூறுகளும் இருக்கிறது.
* டெஃப்லான் கோட்டிங் பாத்திரங்களில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கானது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi ,Subaida Abdul Karim ,Subaita ,Dinakaran ,
× RELATED நித்யா அக்காவுடன் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்!